சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து வருகின்ற 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். இதற்கிடையில் மாற்று கட்சியினரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'வாழை' படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த பொன்வேல் தூத்துக்குடி தவெக நிர்வாகிகள் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
வாழை திரைப்படத்தில் சிவனைந்தனாக பொன்வேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.