வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

1 week ago 10

கமுதி, செப்.12: கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றி காப்பு கட்டுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் வழிபாடு நடைபெற்று வந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். விழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், அக்னி சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில், மாவிளக்கு போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தி வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி வேப்பிலையுடன் கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில், அக்னி சட்டி கையில் ஏந்தி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவை காண சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இக்கிராமத்தினர் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post வள்ளியம்மன் கோயில் பொங்கல் விழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Read Entire Article