மும்பை,
அட்லி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தை அட்லியின் மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் சுமார் ரூ.12.50 கோடி வசூல் செய்தது. இப்படம் தொடர்ந்து வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 'பேபி ஜான்' படத்தை பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,
"பேபி ஜான் ஒரு அற்புதமான, காரசாரமான படம். தவறவிடாதீர்கள்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.