வடகொரிய வீரர்கள் 2 பேர் சிறை பிடிப்பு: ஜெலன்ஸ்கி

4 hours ago 5

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஏறக்குறைய போரானது 3-ம் ஆண்டை நெருங்கி வருகிறது. கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை போரின் தொடக்கத்தில் ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை பதிலடி கொடுத்து உக்ரைன் மீட்டது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.

இந்த போரில், ரஷியாவுக்கு வடகொரியா மறைமுக உதவி செய்கிறது என்று உக்ரைன் குற்றச்சாட்டு கூறி வருகிறது. எனினும், இதுபற்றி அந்த இரு நாடுகள் தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரில் வடகொரியாவும் ஈடுபட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வடகொரியாவின் வீரர்கள் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், குர்ஸ்க் பகுதியில் வடகொரிய ராணுவ வீரர்கள் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு கீவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

அவர்களை சிறை பிடித்ததற்காக சிறப்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு ஜெலன்ஸ்கி நன்றியை தெரிவித்து கொண்டார்.

வடகொரிய வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. உலகத்திற்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக கைது செய்யப்பட்ட வீரர்களை சந்திப்பதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Entire Article