வட கிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கும்; குமரியில் நான்கு வழிச்சாலை பணியில் சிக்கல் ஏற்படும் அபாயம்: 2025க்குள் முடியுமா?

1 month ago 8


நாகர்கோவில்: வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நான்கு வழிச்சாலைக்காக நீர் நிலைகளில் அமைக்கப்படும் பால பணியில் சிக்கல் ஏற்படும் அபாய நிலை உள்ளது. குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைய போகிறது. முடங்கி கிடந்த இந்த பணிகள், கடந்த 2017 ல் மீண்டும் தொடங்கியது. காரோடு முதல் வில்லுக்குறி, வில்லுக்குறி – நாகர்கோவில், நாகர்கோவில் – கன்னியாகுமரி, நாகர்கோவில் – பெருங்குடி (காவல்கிணறு விலக்கு) என 4 கட்டங்களாக தொடங்கின. படிப்படியாக பணிகள் தொடங்கி முதற்கட்டமாக நாகர்கோவில் அப்டா முதல் – பெருங்குடி (காவல்கிணறு விலக்கு) வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது நான்கு வழிச்சாலை செயல்பாட்டில் உள்ளது. இந்த சாலையில், திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டும் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் அதிமுக ஆட்சியில், போதிய ஒத்துழைப்பு வழங்காததால் மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் பணியை ஒப்புக்கொண்டிருந்த எல்.அன்ட்.டி நிறுவனம் நஷ்டம் ஏற்பட்டதால், ஒன்றிய அரசுடன் பேசி ஒப்பந்தை கைவிட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், வெளிமாவட்டங்களில் இருந்து மண் வசதி செய்யப்படும் என உறுதி அளித்தது. இதனையடுத்து, நகாய் சார்பில் மீண்டும் 4 வழிச்சாலை பணியை தொடங்க 25.11.2022 அன்று ரூ.1,041 கோடியில் (ஜிஎஸ்டி நீங்கலாக) டெண்டர் விடப்பட்டு பணிகள் ஒரே பேக்கேஜில் நடைபெறும் எனவும், 2025ல் பணிகளை நிறைவு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அதன் படி பணிகள் வேகமாக தொடங்கின. முதற்கட்டமாக நீர் நிலைகளில் பாலங்கள் அமைக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் தொடங்கி சுமார் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.

நீர் நிலைகளில் பாலங்கள் அமைக்கப்படுவதால், மண் தேவை அதிகமாக உள்ளது. தேவைக்கேற்ப மண்ணை பெறுவதில் சிக்கல் உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் பாறைகளை உடைத்து அதன் பின்னர் பாலத்துக்கான தூண்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடியில் தற்போது குளத்தில் பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஏற்கனவே கான்கிரீட் போடப்பட்டு அதன் மேல் சுமார் 400 டன் மணல் மூடைகள் அடுக்கி பரிசோதனை நடக்கிறது. மேலும் பாலத்துக்கான துளை போடும் பணியும் தொடங்கி உள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், நான்கு வழிச்சாலையில் மேலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பினால், மேலும் பணிகள் பாதிப்படையும் என அஞ்சப்படுகிறது. இதனால் 2025 க்குள் நான்கு வழிச்சாலை முடிவடையுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், நான்கு வழிச்சாலை பணிகளை முற்றாக நிறைவு செய்ய 30 க்யூபிக் டன் மண தேவை உள்ளது. அனால், தற்போதைய சூழலில் இந்த மண்ணை எப்படி? எப்போது ? கொண்டு வந்து நான்கு வழிச்சாலை பணிகள் திட்டமிட்டபடி விரைந்து முடிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மழை காலங்களில் மண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண் ஈரமாக இருப்பதால், அதன் எடை அதிகரித்துள்ளது. இதனால், மண் கொண்டு வரும் டாரஸ் லாரிகளில் போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், அதிக பாரம் என வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதனால், போதிய அளவு மண் கொண்டு வர முடியாத சூழல் உள்ளது.

காரோடு முதல் கன்னியாகுமரி வரை 56 கி.மீக்கு சாலை அமைக்க வேண்டும். இதில் ஆங்காங்கே பகுதி பகுதியாக 34 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் 24 கி.மீ தொலைவிற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. புத்தேரியில் 450 மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம், தோட்டியோட்டில் 325 மீட்டர் பாலம் என 6 பெரிய பாலங்கள் அமைக்கும் பணிகளும், 54 சிறிய மற்றும் சிறு பாலங்கள் அமைக்க வேண்டியது உள்ளது என்றனர். மழையால் பாலங்கள் அமைக்கும் பணி சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

The post வட கிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கும்; குமரியில் நான்கு வழிச்சாலை பணியில் சிக்கல் ஏற்படும் அபாயம்: 2025க்குள் முடியுமா? appeared first on Dinakaran.

Read Entire Article