ஜான்சி,
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஆசிரியராக இருப்பவர் குல்தீப் யாதவ். இவர் வகுப்பில் பாடம் நடத்துவதற்கு பதிலாக, மொபைல் போனில் ஆபாச படம் பார்த்தபடி இருந்துள்ளார்.
இதனை 8 வயது மாணவன் ஒருவன் கவனித்து, சிரித்து இருக்கிறான். அவனுடன் சேர்ந்து மற்ற மாணவர்களும் வகுப்பில் சிரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் குல்தீப், அந்த குறிப்பிட்ட மாணவனை கடுமையாக அடித்து, தாக்கியுள்ளார்.
இதுபற்றி மாணவனின் தந்தை ஜெய் பிரகாஷ் கூறும்போது, அந்த ஆசிரியர் என்னுடைய மகனின் தலைமுடியை பிடித்து இழுத்து சுவரில் மோதியதில் அவனுடைய காதில் காயங்கள் ஏற்பட்டன. அவர், ஆபாச வார்த்தைகளால் பேசியதுடன், பிரம்பு கொண்டு கடுமையாக அடித்துள்ளார். சம்பவம் பற்றி காவல் நிலையத்தில் நான் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.
அவருடைய புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார், ஆசிரியரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு கோபிநாத் சோனி கூறும்போது, பள்ளியில் 8 வயது மாணவனை, அவனுடைய வகுப்பு ஆசிரியர் அடித்தது பற்றி, மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாங்கள் ஆசிரியரை பிடித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.