ரெட்டியார்சத்திரம் அருகே தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்; தென்னை, வாழைகளை ஒடித்து அட்டகாசம்: ரூ.பல லட்சம் நஷ்டம் என விவசாயிகள் கவலை

2 days ago 1

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் அருகே, தோட்டங்களில் புகுந்து முகாமிடும் காட்டுயானைகள் ரூ.பல லட்சம் மதிப்பிலான தென்னை, வாழைகளை ஒடித்து சேதப்படுத்தியுள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் நீலமலைக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பில் தென்னை, வாழை, எலுமிச்சை, பப்பாளி, சப்போட்டா உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் விவசாய நிலங்களில் புகுந்து நாசம் செய்து வருகின்றன. நேற்று இரவு தோட்டங்களுக்குள் புகுந்த யானைகள் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஜெயராமன், சண்முகம், சூரியநாராயணன் ஆகியோர் கூறியதாவது: இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் தோட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. எங்களது தோட்டங்களில் 350-க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. நேற்று இரவும் பயிர்களை நாசப்படுத்தியுள்ளன. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் சேதமடைந்துள்ளன. வனத்துறையினர் காட்டு யானைகளை துரத்தினாலும் அவை மீண்டும் தோட்டங்களில் புகுந்துவிடுகின்றன. காட்டு யானைகளால் அச்சமடைந்து மாலை 5 மணிக்கே கிராம மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர். எனவே, இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கும்கி யானைகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டிவிட வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என தெரிவித்தனன.

இதுகுறித்த தகவலின்பேரில் கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் வனவர்கள் கார்த்திக், நாகராஜ், அய்யனார், செல்வம் மற்றும் வனக்காப்பாளர்கள் யானைகளால் சேதமடைந்த தென்னை, வாழை மரங்களை பார்வையிட்டனர்.

The post ரெட்டியார்சத்திரம் அருகே தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்; தென்னை, வாழைகளை ஒடித்து அட்டகாசம்: ரூ.பல லட்சம் நஷ்டம் என விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article