சென்னை,
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவருக்கு வேற வேலையில்லை. அதனால்தான் தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு அன்புமணி ராமதாஸ், தமிழிசை சவுந்தரராஜன், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் ராமதாஸ் மீது வெறுப்பை உணர்ந்திருக்கிறார். ஐயா அவர்கள் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இம்மக்கள் இந்த மண் மொழி இனம் குறித்து மட்டுமே சிந்தித்து செயலாற்றி வருபவர்.அவர் நாள்தோறும் வெளியிடும் அறிக்கைகள் அனைத்துமே உடனடி தீர்க்கப்பட வேண்டிய செயல்படுத்த வேண்டிய சமூகத்தின் தேவை என்பது அதனை படித்தவர்களுக்கு புரியும்.
மருத்துவர் ஐயா அவர்கள் வேலையில்லாமல் அறிக்கைகள் வெளியிடவில்லை. வேலை தெரியாதவர்கள் செயல்படுவதற்காக வெளியிடுகிறார்! இதுவரை எந்த ஒரு அரசியல் பதவியையும் அனுபவிக்காமல் தனி மனிதனாக இருந்து 6 சதவீத இட ஒதுக்கீடுகளை இந்திய சமுதாயத்திற்கு பெற்றுத் தந்தவர்!
அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருபவர் அல்ல! அம்பேத்கரின் கொள்கைப்படி இட ஒதுக்கீடு கொள்கைகளை பின்பற்றி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்! முதல்-அமைச்சர் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு பேசி இருக்கக் கூடாது." என கூறியுள்ளார்.
அழகி, பள்ளிக்கூடம், 9 ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் பா.ம.க. சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.