ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழைக்கு வாகனக் காப்பக காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 10 சொகுசு கார், ஒரு ஆட்டோ உட்பட 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அருகே, இந்திரா நகரில் தனியார் வாகன காப்பகம் உள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. இந்த வாகனக் காப்பகத்தின் சுற்றுச்சுவரையொட்டி நீரோடை செல்கிறது. இது முறையாக பராமரிக்கப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கின்றன. இந்நிலையில், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பெருக்கெடுத்த மழைநீர் நீரோடை வழியாக செல்லாமல் தேங்கி நின்றது.
இதனால் ஈரப்பதத்துடன் காணப்பட்ட வாகன காப்பகத்தின் 200 அடி காம்பவுண்ட் சுவர் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில், காம்பவுண்ட் சுவர் ஓரம் நிறுத்தியிருந்த 10 சொகுசு கார், ஒரு ஆட்டோ உள்பட 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையத்தில் பெய்த பலத்த மழைக்கு 200 அடி காம்பவுண்ட் சுவர் இடிந்து 15 வாகனங்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ராஜபாளையத்தில் பலத்த மழைக்கு பார்க்கிங் காம்பவுண்ட் சுவர் இடிந்து 15 வாகனங்கள் சேதம் appeared first on Dinakaran.