ராகுல் காந்திக்கு சம்மன்: ஜனவரி 7-ந் தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

4 hours ago 2

லக்னோ,

நாட்டின் செல்வ வளங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில் ஆஜராக உத்தர பிரதேச பரேலி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மக்களவை தேர்தலின்போது அரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் நாட்டின் செல்வ வளம், பொருளாதாரம் குறித்து ஆய்வு நடத்தப்படும். இதன் மூலம் இந்தியாவின் செல்வவளம் உண்மையில் யாருடைய கைகளில் உள்ளது என்பது தெரியவரும். நாட்டின் நலிந்த பிரிவினரின் சதவீதம் அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கு சொந்தமான சொத்து சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் மக்கள் தொகை அதிகம் உள்ளவர்கள் அதிக சொத்துக்களைக் கோரலாம். இதுதொடர்பான ஆய்வுக்குப் பிறகு எங்கள் அரசு புரட்சிகர நடவடிக்கை எடுக்கும்" என்று ராகுல் காந்தி கூறி இருந்தார்.

ராகுல்காந்தியின் இந்த கருத்து பிரிவினையை தூண்டும் வகையில் உள்ளதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்து அமைப்பின் தலைவரான பங்கஜ் பதக் என்பவர் குற்றம் சாட்டினார். மேலும் அவர் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி எம்பி, எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, பங்கஜ் பதக் பரேலி மாவட்ட கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுதிர் குமார் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த கோர்ட்டு, வழக்கு விசாரணைக்காக ஜனவரி 7-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி கூறி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

Read Entire Article