புதுடெல்லி,
கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம், காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக எம்.பி.,க்கள் போராட்டம், பாஜக எம்.பி.,க்களை தள்ளிவிட்ட விவகாரம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கிழே விழுந்ததாக எழுந்த புகார் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறி ஒரே பரபரப்பாக காணப்பட்டது. பாஜக - காங்கிரஸ் என இரு கட்சியினரும் நாடாளுமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், டெல்லியில் மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தங்களது பிரச்னைகளை எழுப்ப ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.,க்கள் போராட்டம் நடத்திய போது, ராகுல் காந்தி அங்கு ஏன் செல்ல வேண்டும். வேறு வழியில் செல்லும்படி பாதுகாவலர்களை கூறிய போதும், அதனை மீறி சென்று பாஜக எம்.பி.,க்களை தள்ளிவிடத் துவங்கினார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார். அவர் தள்ளியதால், பாஜகவின் மூத்த எம்.பி., விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஐசியூ.,வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எங்கள் எம்.பி.க்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர். மேலும் பாஜக தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும். நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கார்கேவும், ராகுலும் மன்னிப்பு கேட்பார்கள் என நம்பினோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. நாகலாந்து பெண் எம்.பி., பாங்னோன் கொன்யாக், கூறியது மிகுந்த வேதனை அளிக்கிறது. தான் முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாக அவர் மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்துள்ளர். அப்போது கண்ணீருடன் மனு அளித்ததாக அவைத்தலைவர் கூறியுள்ளார் என்றார்.