மாஸ்கோ,
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷிய படைகளிடையே மீண்டும் பயங்கர மோதல் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் படைகள் நடத்திய 12 தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும், சுமார் 450 உக்ரைன் ராணுவ வீரர்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 2 பீரங்கிகள், 3 காலாட்படை தாக்குதல் வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.