மும்பை,
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் கடைசியாக 'ஹீரமண்டி' என்ற வெப் சீரிசை இயக்கி இருந்தார். இதனையடுத்து பன்சாலி, 'லவ் அண்ட் வார்' என்ற படத்தை இயக்குகிறார். இதில், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதற்கு முன்பு கடந்த 2007-ம் ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'சாவரியா' படத்தை பன்சாலி இயக்கி இருந்தார். இதனையடுத்து சுமார் 18 வருடங்களுக்கு பிறகு பன்சாலியுடன் ரன்பீர் கபூர் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படம் 2026-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள ஓரி மற்றும் நடிகை தீபிகா படுகோன் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், ஆலியா பட்டில் நண்பராக ஓரியும், கேமியோ ரோலில் தீபிகா படுகோனும் நடிக்க உள்ளதாக தெரிகிறது. நடிகர் ஷாருக்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.