யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்..!!

10 hours ago 2

சென்னை: யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாணவர் அணிச் செயலாளர் வெளியிட்டுள்ள
அறிவிப்பில்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கல்வி உரிமையையும், மாநில உரிமையையும் பறிப்பதற்கு ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் ஆர்.எஸ்.எஸ். பாஜக பாசிச அரசு தொடர் முயற்சிகளைச் செய்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் எளிய மக்களின் கல்வியைக் கபளீகரம் செய்வதற்கும், சமூகநீதியைப் பறிப்பதற்கும் செய்த முயற்சிகளைத் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறது.

எனவே, எப்படியேனும் அதைத் தமிழ்நாட்டில் கொண்டுவந்து தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கத் தனது அனைத்து அதிகாரங்களையும், வழிகளையும் பயன்படுத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அண்மையில் (06-01-2025) பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வரைவு விதிமுறைகள், ஒன்றிய பா.ஜ.க. அரசின் கெடு நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பல்கலைக்கழகங்களின் தனித்தன்மையை, தன்னாட்சியை ஒழித்து, அனைத்தையும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பெயரால், ஆளுநரின் பெயரால் ஒன்றிய அரசே அபகரிக்கும் திட்டமே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் வரைவு நடைமுறை ஆகும்.

தரப்படுத்துதல் என்பது போன்ற மாய்மால வார்த்தைகளைப் பயன்படுத்தி, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் மீது அதனைத் திணிக்க பல்வேறு வகையான அதிகார வரம்பு மீறல்களைத் தொடர்ந்து செய்துவருகிறது. அதன் மொத்த வெளிப்பாடுதான் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கை. அதனை ‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN)’ முற்றாக நிராகரிக்கிறது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவும், சமூகநீதியைப் பாதுகாக்கவும், ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற நிலையை எட்டுவதற்கும் தடையாக அமையும் எதையும் ஒழிப்பது என்றும் உறுதி ஏற்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள் 2025

[Draft UGC (Minimum Qualifications for Appointment and Promotion of Teachers and Academic Staff in Universities and Colleges and Measures for the Maintenance of Standards in Higher Education) Regulations, 2025] என்பதைக் கண்டித்தும், மாணவர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும், இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள், மாணவர்களிடம் இதன் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையிலும், முதல் கட்டமாக, எதிர் வரும் 10.01.2025 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டத்தை மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்தவுள்ளது.

அடுத்தடுத்த நடவடிக்கைகளாக, மாவட்ட அளவில் கருத்தரங்குகளையும், போராட்டங்களையும், கையெழுத்து இயக்கத்தையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையிலும், ஒன்றிய அரசு கல்வித் துறை மீது நடத்திவரும் தாக்குதலை வெகு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், அனைத்து வகைப் பிரச்சாரங்களிலும் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், கல்லூரி மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு, குமரி ஒலிக்கும் நமது கண்டனக் குரல் செங்கோட்டையில் அமர்ந்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செவிப்பறையை கிழிக்கச் செய்திட அடலேறுகளே அணிதிரண்டு வாரீர்.. வாரீர்… என அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article