மேட்டுப்பாளையத்தில் உணவு, தண்ணீரை தேடி சாலைக்கு வரும் குரங்குகள்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

5 hours ago 4

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உணவு மற்றும் தண்ணீரை தேடி சாலைக்கு வரும் குரங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டு மாடு, புலி, சிறுத்தை, கரடி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. சமீபகாலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோத்தகிரி, குன்னூர் வழியாக செல்லும் சாலைகளில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் குரங்குகள் கூட்டம் சாலையிலேயே உலா வருகின்றன.

ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு உணவருந்துகின்றனர். பின்னர், மீதமாகும் உணவு பண்டங்களை சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். இதனால், வனப்பகுதியிலிருந்து வெளியேறும் குரங்குகள் கூட்டம் சாலையோரங்களில் வீசி செல்லும் உணவு பண்டங்களை உண்டு வருகின்றன. ஆனால், வழக்கமாக இரை தேடும் பழக்கமுடைய குரங்குகள் கூட்டம் சுற்றுலா பயணிகளால் இரை தேடுவதை விட்டுவிட்டு சாலையில் சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் உணவு பண்டங்களுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் உணவு பண்டங்களை உண்ணும் குரங்குகள் சில சமயங்களில் ஆபத்தான முறையில் பிளாஸ்டிக் கவர்களையும் விழுங்கி உயிருக்கு போராடும் நிலை உள்ளது.

இதேபோல் பிரசித்தி பெற்ற தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக அலைந்து வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி சமைப்பது, உண்டது போக மீதமுள்ள உணவு பண்டங்களை சாலையோரங்களில் வீசி செல்வதால் குரங்குகள் இதனை சாப்பிடுகின்றன. இதனால் வனவிலங்குகள் வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் கூறுகையில், ‘‘மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோத்தகிரி, குன்னூர் சாலைகள் மற்றும் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சாலையோரம் நிறுத்தி உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

உணவருந்தி விட்டு மீதமாகும் உணவு பண்டங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவற்றை வீசிச்செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் சாலையில் நிற்பதை கண்டால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வனச்சரகர் சசிகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post மேட்டுப்பாளையத்தில் உணவு, தண்ணீரை தேடி சாலைக்கு வரும் குரங்குகள்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article