வகுப்பறையில் உள்ள பலதரப்பட்ட கற்றல் திறன் கொண்ட மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதமாக ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் அமைந்திருக்க வேண்டும். வகுப்பறையில் இருக்கும் ஒட்டுமொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் சில மாணவர்கள் கல்வித் தேர்ச்சி போதிய அளவில் இல்லாமல் இருக்கிறது. அடைவுத்தேர்வுகளில் இவர்கள் குறைந்த மதிப்பெண்களையே பெறுகின்றனர். ஓரளவு திறமையிருந்தும் கல்வியில் பின்தங்கியுள்ள இத்தகைய மாணவர்களின் நிலைக்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை நீக்கி அவர்களையும் கல்வியில் முன்னேற்றமடையச் செய்வது ஆசிரியரின் கடமையாகும். கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் வகுப்பில் 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருப்பார்கள் என புள்ளிவிவரம் கூறுகிறது. பின்தங்கிய மாணவர்களைப் பின்வரும் வழிமுறைகளில் அடையாளம் காணலாம்.
*நுண்ணறிவு ஈவு 70க்கும் கீழ் உள்ள மாணவர்கள் பிற்பட்ட மாணவர்களாக இருப்பர்.
*அடைவுத்தேர்வு ஒன்றினை நடத்தி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இம்மாணவர்களை அடையாளம் காணலாம்.
*தனியாள் ஆய்வு மூலம் கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டுபிடிக்கலாம்.
*வகுப்பிலும் வெளியிலும் மாணவர்களின் செயல்களைக்கொண்டு கற்றலில் பின்தங்கியவர்களை ஆசிரியர்கள் எளிதில் அடையாளம் காணலாம்.
*கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் பெரும்பாலும் வகுப்பில் மந்தமான முறையில் ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பர். சில மாணவர்கள் வகுப்பில் பிரச்னையை உண்டு பண்ணுபவர்களாகவும் இருப்பர்.
*அடிப்படைக் கணிதக் கருத்துகள், பாடக் குறிப்புகளை அதிக நாள் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.
*பின்தங்கிய மாணவர்களுக்குப் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கும். கொடுத்துள்ள தகவல்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிய மாட்டார்கள்.
*பிற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வரமாட்டார்கள். ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டு வேலையைச் சரிவர செய்ய மாட்டார்கள்.
*ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பிலிருந்து தப்புவதற்கு வகுப்பில் கடைசி இருக்கையில் அமர்வர்.
இத்தகைய குழந்தைகள் வாசிக்கும் திறனிலும், கணிதத் திறன்களிலும் பின்தங்கியிருப்பதாலும் இத்தகையோருக்குக் கற்பிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் மெதுவாகக் கற்போருக்கு என தனிப்பட்ட வகுப்புகள் நடத்துவதுதான் சிறந்த முறையாகும். வகுப்பறைக் கற்பித்தலில், பருப்பொருள் நிலைக் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளக்கப் படங்கள், மாதிரிகள், செய்து காட்டல்கள், காட்சி கேள்வி சாதனங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் அதிக அளவில் கற்றலில் ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கருத்தை சோதித்த பின்பும் அதை நிலைநிறுத்த அதிக அளவு பயிற்சி கொடுத்தல் வேண்டும்.
பள்ளிச்சூழலோடு இணக்கம் பெற்றிட உதவுதல் மெதுவாகக் கற்போரது தன்னம்பிக்கை வளர, ஆசிரியர்களின் தொடர் ஊக்குவிப்பு தேவைப்படும். மெதுவாகக் கற்போரைக் குழுச் செயல்களிலும் குழு விளையாட்டுகளிலும் பங்குபெறச் செய்வதன் மூலம் அவர்களிடம் தன்னம்பிக்கையையும், மற்றவர்களுடன் இணக்கமுற நடந்து கொள்ளுதலையும் வளர்த்திட முடியும். இத்தகைய குழந்தைகளோடு நிலையான தொடர்பு வைத்திருத்தல் அவசியமாகிறது. தொழில் தேர்வு, சரியான பொழுதுபோக்குகளைத் தெரிவுசெய்து ஈடுபடுதல், சமூக வாழ்வு, திருமணத்திற்குத் தயாராதல் என அனைத்து அம்சங்களிலும் இத்தகைய குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் தேவையாகும். தொடர் வழிகாட்டுதல் பெறுவதன் மூலம் இவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் வாழ முடியும்.
The post மெதுவாகக் கற்போருக்குத் தனிக்கவனம் செலுத்த வேண்டும்! appeared first on Dinakaran.