புதுடெல்லி: “இன்றைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தமிழகத்துக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் மன்மோகன் சிங் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்ததற்கும் அவர் தான் காரணம். அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்கும் அவர் தான் காரணமாக இருந்தார். ஆனால் இடையிலே அத்திட்டம் நின்றுவிட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்துக்கு வருவற்கு அவர் தான் காரணமாக இருந்திருக்கிறார்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் உடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.