மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத ஆன்மிகப் பயணம் வரும் 21ம் தேதி முதல் தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

5 days ago 5

சென்னை: மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிகப் பயணம் வரும் 21ம் தேதி தொடங்குகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரி, சேமாத்தம்மன் கோயிலில் ரூ. 1.58 கோடியிலான கருங்கல் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தையால்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

ஓட்டேரியில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட சேமாத்தம்மன் கோயிலுக்கு, அதற்கு சொந்தமான இடத்தில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் முன்பிருந்த கோயிலை விட, பக்தர்களுக்கு தேவையான வசதிகளுடன் புதிதாக கருங்கல் கோயில் கட்டுவதற்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான புரட்டாசி மாத வைணவ கோயில்களுக்கான ஆன்மிகப் பயணம் செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளது.

1000 மூத்த குடிமக்கள் பங்கேற்கும் இத்திட்டத்திற்காக அரசு ரூ.25 லட்சத்தினை அரசு மானியமாக வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாநகராட்சி மன்ற உறுப்பினர் பரிமளம், கோயில் செயல் அலுவலர் முத்துராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மூத்த குடிமக்களுக்கான புரட்டாசி மாத ஆன்மிகப் பயணம் வரும் 21ம் தேதி முதல் தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article