முயற்சித்துப் பார் வெற்றி நிச்சயம்!

5 days ago 5

நாம் தோற்றுவிடுவோமோ, ஒதுக்கப்பட்டு விடுவோமோ, வெளியேற்றப்பட்டு விடுவோமோ, அதனால் இந்த உலகம் நம்மை மதிப்பு குறைவாக பார்க்குமோ என்ற அச்சமும், தயக்கமும் நம்மில் பலருக்கும் இருப்பதால்தான் நாம் களம் இறங்கவே பயப்படுகின்றோம். இதைத்தான் புறந்தள்ளப்படுவோமோ என்ற அச்சம் என்கிறார்கள்.சற்று யோசித்துப் பாருங்கள் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது, தெரியாத வேலையை நாம் ஏன் பார்க்கணும், வேறு ஏதாவது நல்ல வேலை இருந்தா பாரு, கண்டதை இழுத்து போட்டுக்காதே என இப்படியெல்லாம் நாம் திரும்ப திரும்ப சொல்வதின் நோக்கம். தோல்வியின் மீதான பயம் தான். மாறாக முயற்சித்துப் பார்ப்போமே என்றுதான் வெற்றியாளர்கள் நினைக்கின்றார்கள்.ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் ஓட்டப்பந்தயத்தில் நூறு பேர் ஓடினால் மூவர் மட்டும் தான் வெல்கிறார்கள். மீதி 97 பேருக்கு தோல்விதான், இது தெரிந்துதான் நூறு பேரும் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள். இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த முறையாவது ஜெயிப்போம் அதற்கு பயிற்சியாக இந்த போட்டி அமையட்டும் என்று நம்புகிறார்கள்.

வழக்கு என்று வந்துவிட்டால் வழக்கறிஞர்கள் இருவரில் ஒருவர் தான் ஜெயிக்க முடியும். மற்றவர் தோல்வியை தான் தழுவ வேண்டும். அதற்காக தோற்றுவர் மறுமுறை வழக்காடு மன்றத்தில் வாதாடாமல் இருக்கப் போவதில்லை.மருத்துவம் என்று வந்துவிட்டால் அறுவை சிகிச்சையின் போது சில நேரங்களில் இறப்பு கூட நேரலாம். அதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கே பயந்தால்.அவர்களின் படிப்புக்கு அர்த்தம் என்ன.எனவே தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, தோற்றுவிடுவோமோ என்கிற தயக்கம் ஒருபோதும் நம்மை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல போவதில்லை. மாறாக தோற்றால் என்ன மீண்டும் முயற்சிப்போம் என்கிற சிந்தனை இருப்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.அமெரிக்காவில் பிறந்தவர் கரேன். அழகான நீண்ட கை, கால்களுடன் 27 வயது வரை துள்ளித் திரிந்தார் கரேன்.பிறருக்கு உதவ வேண்டும் என்கிற விருப்பத்தில் நர்சிங் படித்து, பிரபல லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் பணிபுரியப் பதிவு செய்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு தண்டு மூளைச் சவ்வு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் கரேன். வேகமாக அவரது கைகளும், கால்களும் சுருங்கிப் போயின. மூக்கு முற்றிலும் அழிந்து போனது. காதுகள் பாதிப்படைந்தன. மேல் உதடு காணாமல் போனது. முடி உதிர்ந்து போனது. கேட்கும் சக்தியை இழந்தார். மூளையில் ரத்தம் உறைந்து போனது. சிறுநீரகம் வேலை செய்ய மறுத்தது. சுவாச மண்டலமும் பாதிக்கப்பட்டது.
இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. பிழைக்கக்கூடிய வாய்ப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். 15 நாட்கள் கோமாவில் இருந்தார். ஐந்து மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார்.

மருத்துவர்களின் கவனிப்பு, பெற்றோரின் அரவணைப்பு, நண்பர்களின் அக்கறையால் கண் திறந்தார் கரேன். கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியது. தனது உருவத்தைப் பார்த்து தனக்கே அடையாளம் தெரியாதபடி மாறிப்போனதில் நிலை குலைந்து போனார். பெற்றோரும் மருத்துவர்களும் அவர் பிழைத்த அதிசயத்தை எடுத்துச் சொல்லி, நம்பிக்கையூட்டினர். புத்திசாலியான கரேன் விரைவில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னை தயார் படுத்திக் கொண்டார்.காது,உதடு என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. உருவத்திலும் உள்ளத்திலும் புதிய பெண்ணாக உருவெடுத்தார் கரேன். நோய்க்கு முன்பு அவருக்கு அழகான கனவுகள் நிறைந்திருந்தன இப்பொழுதோ தைரியம் ஆக்கிரமித்து இருந்தது அறுவை சிகிச்சைகளுக்கும், சக்கர நாற்காலிக்கும் ஏராளமாக செலவானது. இந்த நிலையில் செயற்கைக் கை, கால்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வரும் வழியில் செயற்கை கைகள் களவு போய்விட்டன.

மீண்டும் செயற்கை கைகள் வாங்கக் கூடிய அளவுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. வருத்தத்தில் இருந்த கரேனின் கவனத்தை ஈர்த்தது தொலைக்காட்சியில் நடந்துகொண்டிருந்த ஃபேஷன் ஷோ. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி டாக்டர் டேனியல் வலம் வந்தார். உடனே கரேனுக்கும் ஃபேஷன் ஷோவில் பங்கேற்கும் எண்ணம் வந்தது. டிசைனர் கெர்ரி ஹாம்மருக்கு ஒரு மெயில் அனுப்பினார். எந்த வடிவத்திலும், எந்த அளவிலும் அழகு வரலாம். எதையும் சரி என்று சொல்வதற்கோ, தவறு என்று சொல்வதற்கோ முடியாது. விரைவில் தொடர்பு கொள்கிறேன் என்று பதில் வந்தது.நீண்ட காலத்துக்கு பிறகு கரேனின் முகத்தில் மகிழ்ச்சி. இரண்டு நாட்களில் இருவரும் ஸ்கைப் மூலம் பேசினர். கரேனின் அபாரமான தன்னம்பிக்கையும், நேர்மறையான சிந்தனைகளும் தனக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக கூறினார் ஹாம்மர்.

விரைவில் இருவரும் சந்தித்தனர். கரேனுக்கு ஃபேஷன் ஷோக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆடைகள் தயாராயின தலை, முக அலங்காரங்கள் செய்து பார்க்கப்பட்டன. தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு,ஒரு சிறிய தவறால் கூட தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஃபேஷன் ஷோக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கரேனுக்கு செயற்கை கைகளை பரிசாக வழங்கினார் ஹாம்மர். ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கினார் கரேன். ஹாம்மருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார்.புகழ் பெற்ற ரன்வே ஃபேஷன் ஷோ ஆரம்பித்தது. திரைக்குப் பின்னால் இருந்த கரேனின் கைகள் சரியாகப் பொருத்த வில்லை. எல்லோரும் பதற்றமானார்கள். ஆனால் கரேன் சட்டென்று தானே சரி செய்து கொண்டு மேடைக்கு வந்தார். சிவப்பு உடையில் முகம் முழுவதும் புன்னகையைப் படரவிட்டபடி, கேட்வாக் செய்தார். மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.நியூயார்க் ரன்வே ஃபேஷன் ஷோவில் கரேன் நடந்து வந்தபோது, பார்வையாளர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள். எழுந்து நின்று நீண்ட நேரம் கைகளை தட்டிக் கொண்டிருந்தனர். ஃபேஷன் உலகில் புதிய வரலாறு படைத்திருந்தார் கரேன். செயற்கைக் கைகளுடனும், இரண்டு செயற்கைக் கால்களுடனும் அவர் கேட்வாக் செய்திருந்தார்.

ஒரு செவிலியராக சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பேன். ரன்வே ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பது எத்தனையோ லட்சக்கணக்கானவர்களின் கனவு. அந்த வாய்ப்பை வழங்கிய என் நோய்க்கும் டிசைனர் ஹாம்மருக்கும் என் நன்றிகள். உடல் முழுவதும் குறைபாடுகளுடன் சாவின் நுனி வரை சென்று மீண்டு நான், இந்த உலகத்தின் கவனத்தைப் பெற்றிருக்கின்றேன். எந்த துன்பத்தையும் நம் முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் துரத்தி அடிக்க முடியும். வாழ்க்கை மிகவும் குறுகியது.எதற்காகவும் தேங்கிவிடாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் கரேன்.இவரைப்போல முயற்சித்துப் பார் என்ற சிந்தனையோடு களம் இறங்குவோம்,தோல்வியை தோற்கடிப்போம்,வெற்றி நிச்சயம்.

The post முயற்சித்துப் பார் வெற்றி நிச்சயம்! appeared first on Dinakaran.

Read Entire Article