சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் இல்ல விழாவில், ராமதாசை நேருக்கு நேர் சந்திப்பதை அன்புமணி தவிர்த்தார். ஜி.கே.மணி மட்டும் அவரை சந்தித்து பேசினார். சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பாமக வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியின் மகன் விஜய் மகேஷ் நிச்சயதார்த்த விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்சி பிரச்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான மோதல் போக்கு நீடித்து வரக்கூடிய சூழலில் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதை கடந்த சில நாட்களாகவே தவிர்த்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் ராமதாசை தைலாபுரத்தில் அன்புமணி சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் இருவரும் சந்தித்துக் கொள்ளாமலே இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த பாமக வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியின் இல்ல நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் சென்னை வந்தார். நேற்று முன்தினம் காலையில் சரஸ்வதி மட்டும் பனையூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். வீட்டு வாசல் வரை சென்ற சரஸ்வதியை அன்புமணி வரவேற்று அழைத்துச் சென்று, ஆசி வாங்கும் வீடியோ வெளியாகியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் நடந்த நிகழ்ச்சியில் மகள் காந்திமதி, மனைவி சரஸ்வதியுடன் ராமதாஸ் கலந்து கொண்டார். இதனையடுத்து, ராமதாஸ் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு மணமக்கள் இருவரும் ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியர் காலில் விழுந்து ஆசிப்பெற்றனர். தொடர்ந்து விழாவுக்கு அன்புமணியும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமதாஸ் செல்லும் வரை அன்புமணி வரவில்லை.
அதன் பின்னர் ராமதாஸ் தம்பதியர் சென்ற பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து அன்புமணி மற்றும் சவுமியா அன்புமணி ஆகியோர் மூத்த மகளுடன் விழாவுக்கு வந்தனர். நிச்சயதார்த்த விழாவுக்கு வந்த அன்புமணி, மணமக்களுக்கு தான் கொண்டு வந்த மோதிரத்தை பரிசளித்தார். அந்த மோதிரத்தை மணமக்கள் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு, அன்புமணி தம்பதியர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இதன் பின்னர் அன்புமணி வருவதற்கு முன்பாக விழாவுக்கு வந்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி காத்திருந்து அன்புமணியை சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். ராமதாசுடன் வந்த ஜி.கே.மணி, அன்புமணியை சந்திக்கவே ஓட்டலில் காத்திருந்தார். அன்புமணி வந்த பிறகு அவரை சந்தித்து நலம் விசாரித்த பிறகு புறப்பட்டார். ராமதாஸ் இருக்கும் வரை அன்புமணி வராமல் இருந்தது பாமகவினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
The post முன்னாள் ஒன்றிய அமைச்சரின் இல்ல விழாவில் ராமதாசை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்த அன்புமணி: ஜி.கே.மணி மட்டும் சந்தித்து பேச்சு appeared first on Dinakaran.