மதுரை,
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும். எனவே விரைவில் மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான சிறப்பு பூஜைகள், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
மேலும் கோவிலில் புனரமைப்பு பணிகள் மற்றும் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதற்காக கோவில் கோபுரங்களை சுற்றி திரைத்துணி சுற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி தீபாவளி அன்று வாணவேடிக்கை, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், ஆபத்தை விளைவிக்கக்கூடிய பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.