மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு

3 hours ago 3

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்குப் பின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசு தமிழக மீனவர்களை தண்டனை கைதிகளாக மாற்றி, பெரும் தொகையை அபராதமாக விதித்து கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் மீனவர்களுக்கு மொட்டை அடித்து அவர்களது தன்மானத்தை பறிக்கும் செயலை செய்துள்ளது. இலங்கை அரசின் தொடர் அத்துமீறல் செயல்களைக் கண்டிக்காமல் தாங்கள் தான் உலகத்திற்கே சமாதானம் செய்து கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி பேசி வருகிறார். ரஷ்யா – உக்ரைன் பேரை நிறுத்தி சமாதானம் செய்வதற்காக இரு நாடுகளுக்கும் பயணம் செய்யும் மோடி, இலங்கை அரசை கட்டுப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாதா?

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தொடர்ந்து நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை சல்லிக்காசு கூட கொடுக்கவில்லை. மீனவர்கள் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் காதுகேளாத அரசாக மோடி அரசு இருக்கிறது. ஒன்றிய மோடி அரசு மீனவர்களின் பிரச்னைகளை தீர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு தெரிவித்தார்.

The post மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article