வேலூர், நவ.20: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கரிகரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணல் ஆர்டிஓ தலைமையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் சார்பில் காட்பாடி அடுத்த கரிகிரியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் சில வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 73 பேர் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்.
இதுதொடர்பான நேர்காணல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு இயக்க உதவி நிர்வாக பொறியாளர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொதுமேலாளர் தீனதயாளன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளிடம், பங்களிப்புத்தொகை செலுத்த தயாராக உள்ளீர்களா? என்பது குறித்தும், அவர்களுக்கு கடன் வசதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பங்களிப்பு தொகை செலுத்த விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். கடன் வசதி கேட்பவர்களுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ₹1.50 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை 5 வருடத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்க நேர்காணல் ஆர்டிஓ தலைமையில் நடந்தது கரிகிரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் appeared first on Dinakaran.