மாநகராட்சி கூட்டத்தில் மோதல் தொடர்பான வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு

3 hours ago 2

சென்னை,

கடந்த 29.8.2002 அன்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சென்னை கண்ணப்பர் திடலில் மீன் அங்காடி அமைக்கும் டெண்டர் தொடர்பான பிரச்சினையை கிளப்பியது.

இதுதொடர்பாக, அந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்த 'மைக்' மற்றும் நாற்காலிகளை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மீது தூக்கி வீசினர். இதில், அப்போதைய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்க்கரசி, குமாரி உள்ளிட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அளித்த புகாரின்பேரில் சென்னை பெரியமேடு போலீசார், அப்போதைய தி.மு.க. கவுன்சிலர்களான அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில், 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,  முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சாட்சியம் அளித்தவர்கள் பிறழ்சாட்சியாக மாறியதாலும், சரிவர நிரூபிக்காததாலும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Read Entire Article