மாணவர்கள் போராட்டம்; மணிப்பூர் ஆளுநர் திடீர் அசாம் பயணம்: பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

1 week ago 11

இம்பால்: மணிப்பூர் மாநிலம் கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியை மீட்டெடுக்கத் தவறிய போலீஸ் டிஜிபி, பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட 6 கோரிக்கைகள் வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 2 நாட்களாக நடந்து வரும் இப்போராட்டத்தால் இம்பால் கிழக்கு, மேற்கு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தி, சிஆர்பிஎப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்ததால் மோதல் சம்பவங்கள் நடந்தன. நேற்று முன்தினம் நடந்த மோதலில் 55 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மாணவர் பிரதிநிதிகளை அழைத்து மணிப்பூர் ஆளுநர் ஆச்சார்யா ராஜ்பவனில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ஆளுநர் ஆச்சார்யா நேற்று காலை 10 மணி அளவில் திடீரென அசாம் தலைநகர் கவுகாத்தி புறப்பட்டு சென்றார். அசாம் ஆளுநரான ஆச்சார்யா கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் ஆளுநராக உள்ளார்.

தற்போது மாணவர்கள் போராட்டம் வலுத்துள்ள நிலையில், மணிப்பூரில் இருந்து ஆளுநர் வெளியேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் போராட்டம் காரணமாக, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் இளங்கலை தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இம்பால் கல்லூரியில் மாணவர்களை சந்தித்து பேசிய மாநில முதல்வர் பிரேன் சிங், ‘‘மாணவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். அவர்கள் கூறும் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு காணப்படும். அவர்களின் குரல் முக்கியத்துவம் வாய்ந்தது. மணிப்பூருக்கு சிறந்த எதிர்காலத்தை நாங்கள் உறுதி செய்வோம்’’ என்றார்.

The post மாணவர்கள் போராட்டம்; மணிப்பூர் ஆளுநர் திடீர் அசாம் பயணம்: பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article