மருந்தாகும் நீர் வகைகள்!

3 hours ago 3

நன்றி குங்குமம் டாக்டர்

தண்ணீர் என்பது எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட ஓர் உணவுப் பொருள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் குடித்துக் கொண்டிருக்கும் நீரில் தண்ணீருக்கான சத்துகள் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான். அந்தளவுக்கு நாம் குடிக்கும் நீர் மாசினாலும், சுத்திகரிப்பு என்கிற பெயரினாலும் சத்துக்களை இழந்துள்ளது. அதனால் நாம் அன்றாடம் குடிக்கும் நீரையே சற்று மாற்றி உடலுக்கு ஆரோக்கியமான நீராக அருந்தலாம்.

பொதுவாக நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீரைக் கொதிக்க வைத்து, பின்னர் ஆற வைத்துப் பயன்படுத்துவது நல்லது. அதோடு நம் அன்றாட உணவுப்பொருளில் பயன்படுத்துகிற பொருட்களைக் கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான நீராக பயன்படுத்தலாம். அவை எப்படி என்று பார்க்கலாம்.

சீரக நீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் சீரகத்தைச் சேர்த்து ஊறவைத்து நீரைப் பருகினால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்தம், ஏப்பம் போன்றவை தீரும். சீரகம் என்பது சீர்+அகம் = சீரகம். அகத்தை சீர்படுத்துவதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது.

அதாவது நம் வயிற்றில் உள்ள வாயுக்களை களைவதில் முக்கியப்பங்கு சீரகத்துக்கு உண்டு. இதன் கார்ப்பு, இனிப்பு தன்மை உடம்பை குளிர்வித்து உடல் செரிமானத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. பெப்டிக் அல்சர் குணமடைகிறது. மூட்டு வலிகளை குணமடையச் செய்கிறது.

கருஞ்சீரக நீர்

கருஞ்சீரகத்தில் உள்ள Thymoquinone எனும் வேதிப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. நரம்பு செல்களைத் தூண்டுகிறது. கருஞ்சீரகம் போட்டுக் கொதித்த நீரை இரவு தூங்கச் செல்லும் முன் பருகுவது நல்லது.

வெந்தய நீர்

வெந்தயத்தில் உள்ள செபானின் குடலில் அதிகப்படியாக உறிஞ்சப்படும் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த நீராகச் சொல்லப்படுகிறது. மேலும் இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, நிண நீரை சுத்தப்படுத்துகிறது.அரை ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஒருவேளை தினமும் அருந்தி வந்தால் ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் கடுப்பு போன்றவை தீரும். மேலும் நம் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவையும், ஹீமோகுளோபின் அளவையும், ரத்தத்தையும் சுத்திகரிக்கவும் செய்கிறது.

துளசி நீர்

துளசி இலையில் 200க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உள்ளன. இது பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆற்றல் உடையது. எனவே, மூச்சுப்பாதையில் ஏற்படும் பெரும்பாலான நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் சக்தி படைத்ததாக இருக்கிறது. ஐந்தாறு துளசி இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப்பருகி வர குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், தும்மல் போன்ற கப நோய்கள் தீரும்.

நன்னாரி நீர்

நன்னாரி நீரில் 9 வகையான க்ளுக்கோஸ் உள்ளன. மேலும் இது ஒரு நீர்ப்பெருக்கி, நன்னாரி வேரை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த நீரைப் பருகி வர சிறுநீர் சம்பந்தமான நோய்கள், நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு தீரும். உடலில் ஏற்படும் துர்நாற்றம் விலகும்.

நெல்லிக்காய் நீர்

நெல்லிக்காய் உடலில் புரதச்சத்தின் அளவை அதிகரித்து, கொழுப்பினைக் குறைத்து, உடல் பருமனைத் தடுக்கிறது. எனவே, உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால் தினமும் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் ஊற வைத்து தினமும் பருகுவது நல்லது. இதனால் எலும்புகள் ஆரோக்கியமாகும்.

நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் superoxide dismutase என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீரெடிக்கல் எனும் நச்சுக்களிலிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் நீர் அருந்துவது நல்லது. மேலும், நெல்லிக்காய் நீரினால் உடல் சூடு தணியும், ரத்தம் சுத்தமாகும். சரும அழகு மேம்படும்.

மருதம்பட்டை நீர்

மன அழுத்தம் காரணமாக உண்டாகும் நோய்களை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை போன்றவற்றை விரட்டுகிறது. உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. இதனால் குடல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக இருக்கிறது. இந்த மருதம் பட்டையை நேரடியாக நீரில் ஊறவைத்து தினமும் குடித்து வரலாம்.

தொகுப்பு: ரிஷி

The post மருந்தாகும் நீர் வகைகள்! appeared first on Dinakaran.

Read Entire Article