மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த 20-ந்தேதி நடந்தது. தேர்தலில் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. குறிப்பாக பா.ஜனதா 132 தொகுதிகளை கைப்பற்றி 3-வது முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. அந்த கூட்டணியில் உள்ள சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன் எந்த கூட்டணியும் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனவே மகாயுதி கூட்டணியில் எந்த கட்சியை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
பாஜகவை சேர்ந்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று தகவல் வெளியான நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு டெல்லி விரைந்தார். அவர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். இதில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல் மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டேவிற்கும் மனமில்லை என்பதால், புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதில், இழுபறி நீடிக்கிறது.
புதிய முதல்-மந்திரியாக தங்களது கட்சியை தேவேந்திர பட்னாவிசை நியமிப்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு தேவேந்திர பட்னாவிசை அவரது இல்லத்தில் சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிர்சாத் சந்தித்து பேசினார். முதல்-மந்திரி விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டேயை பா.ஜனதா தொடர்ந்து சமரசப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே முதல்-மந்திரி பதவியில் ஏக்நாத் ஷிண்டே நீடிக்க கோரி அவரது ஆதரவாளர்கள் மும்பையில் உள்ள முதல்-மந்திரி இல்லமான வர்ஷா பங்களாவை நோக்கி படையெடுத்தனர். மேலும் ஷிண்டே கட்சியினர் மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கோவில்களில் யாகம் நடத்தி வழிபாடு செய்தனர்.