மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

3 weeks ago 5


மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை நடக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் கண்காட்சியை தினம்தோறும் ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

மராட்டிய மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேற்று மாலை பார்வையிட்டனர்.

அப்போது, சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""முருகப்பெருமான் வட மாநிலங்களில் கார்த்திக் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறார். தென் மாநிலங்களில் கந்தனாக கொண்டாடப்படுகிறார். முருகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளும், தமிழ் மண்ணில் இருப்பது நமக்கு பெருமை. அவரவர் தெய்வங்களை கொண்டாடுவதற்கும், வழிபடுவதற்கும் அரசியல் சாசனம் உரிமை தந்திருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் முருகன் மாநாடு நடத்த அமைச்சர் சேகர்பாபு முன்வர வேண்டும். அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன்" என்றார்.

திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று இந்த மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகள் அமைக்கப்பட்டு நேற்று அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றன.

இந்த மாநாட்டில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநாட்டில் யார், யார் கலந்து கொள்வார்கள் என்ற விவரம் இன்று காலை தெரியவரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read Entire Article