
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி - குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்-மந்திரி பைரன் சிங் பதவி விலகினார். இதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் போலீசார், மத்திய பாதுகாப்புப்படையினர் இணைந்து மாநிலத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவ்பெல், கக்சிங்க், பிஷ்னுபூர் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் கையெறிகுண்டுகள், ஐஇடி குண்டுகள், துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.