புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகாகும்பமேளா நடக்கிறது. இந்த மகாகும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநில நிதி மந்திரி சுரேஷ் கன்னா, நேற்று டெல்லியில் ஒரு வாகன பேரணியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-
மகாகும்பமேளாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. டெல்லி முதல்-மந்திரி அதிஷியையும் சந்தித்து அழைப்பு விடுப்போம். மகாகும்பமேளாவில் பக்தர்களை ஒழுங்குபடுத்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தொலைந்துபோன பக்தர்களை கண்டுபிடித்து மீட்க பல மொழிகள் கொண்ட கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 101 ஸ்மார்ட் வாகன நிறுத்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு தினந்தோறும் 5 லட்சம் வாகனங்களை நிறுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.