ம.பி.யில் இருந்து சென்னைக்கு திரும்பிய கூடைப்பந்து வீராங்கனை மரணம்: ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டது காரணமா?

1 month ago 5

சென்னை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவரது மகள் எலினா லாரெட் (15). கோவையில் உள்ள பெப்பூல் சிபிஎஸ்இ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் நவம்பர் 8 முதல் 15ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் எலினா லாரெட் கலந்துகொண்டார். அங்கிருந்து கிராண்ட்ராங் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக நேற்று முன்தினம் காலை சென்னை வந்தார். அப்போது திடீரென வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் எலினா லாரெட் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு பெரவள்ளூரில் உறவினர் வீட்டுக்கு சென்ற எலினா லாரெட் மீண்டும் வயிற்றுவலி அதிகமாகி மயக்கம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமி எலினா லாரெட்டை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து பெரவள்ளூர் போலீசார் எலினா லாரெட் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று காலை கோயம்புத்தூருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், கடந்த 2 நாட்களாக சிறுமிக்கு வயிற்றுவலி, வாந்தி பிரச்னை இருந்து வந்ததாகவும், எனவே, சுந்தரம் பவுண்டேஷன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதும், பிறகு இளநீர் குடித்ததும் தெரிய வந்தது. மேலும் குவாலியரில் இருந்து திரும்பும்போது மாணவி ரயிலில் சிக்கன் ரைஸ் மற்றும் பர்கர் வாங்கிச் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது சிறுமிக்கு வேறு ஏதாவது பிரச்னை இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக கிடைத்தவுடன்தான் மரணத்திற்கு காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

The post ம.பி.யில் இருந்து சென்னைக்கு திரும்பிய கூடைப்பந்து வீராங்கனை மரணம்: ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டது காரணமா? appeared first on Dinakaran.

Read Entire Article