பள்ளிகொண்டா, அக்.22: பள்ளிகொண்டா சுங்கச்சாவடி சோதனையில் அரசு சொகுசு பேருந்தில் குட்கா கடத்திய வழக்கில், சென்னையில் பார்சல் பெறவிருந்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்லும் கர்நாடக அரசு சொகுசு பேருந்தில் பார்சல் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை சோதனை நடத்தினர். சோதனையில் பேருந்தில் இருந்த டிராவல் பேக் பார்சலில் 120 கிலோ எடையுள்ள ₹1.30 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அணைக்கட்டு டிஎஸ்பி சாரதி கர்நாடக அரசு பேருந்து நடத்துனர் மற்றும் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து பார்சல் அனுப்பிய நபர், சென்னையில் அதனை பெற்றுக்கொள்ளும் நபர்களின் செல்போன் எண்களை போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிந்த போலீசார் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், சென்னையில் பார்சல் பெறவிருந்த நபரின் எண்ணை தொடர்பு கொண்டதில், அவர் பம்மல் பகுதியை சேர்ந்த வசீம்கான் மகன் அக்ரம்கான்(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் எஸ்ஐ பரத், தலைமை காவலர்கள் யுவராஜ், மணிகண்டன் ஆகியோர் இரவோடு இரவாக சென்னை விரைந்தனர்.
தொடர்ந்து, நேற்று அதிகாலை அக்ரம்கான் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பள்ளிகொண்டா காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், அவர் ஆட்டோ, கார் டிரைவராக இருப்பதாகவும், பெங்களூருவிற்கு சவாரி சென்றபோது அங்குள்ள ஆட்டோ டிரைவர் மூலம் தொடர்பு ஏற்பட்டு ஹான்ஸ், குட்கா போதைப் பொருட்களை சென்னைக்கு மாதம் இருமுறை அனுப்பி வைப்பதாகவும் அதற்குரிய பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி விடுவதாகவும் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கு பதிந்த போலீசார் அக்ரம்கானை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், சென்னையை சேர்ந்த அக்ரம்கான் கூட்டாளி பாபு என்பவரையும், பெங்களூருவில் இருந்து பார்சல் அனுப்பிய நபரையும் பிடிக்க போலீசார் வலை வீசியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரிவிலிருந்து சென்னைக்கு ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தும்போது சம்பந்தப்பட்ட கார், டிரைவர் மற்றும் இடைத்தரகர்கள் மட்டுமே சிக்கி கைதான நிலையில், முதல் முறையாக சென்னையில் பார்சல் பெறும் நபரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை வாலிபர் கைது பெங்களூரு கூட்டாளிகளுக்கு வலை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி சோதனையில் சிக்கியது appeared first on Dinakaran.