பொள்ளாச்சி அருகே 2 பெண் யானைகள் பலி

1 month ago 7

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் கோட்டூர் பிரிவு பருத்தியூர் உமாண்டி மலை சரக பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நேற்று மதியம் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தின் மேட்டுப்பகுதியில் 9 வயது மற்றும் 11 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானைகள் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வனத்துறையினர் ஆராயும்போது, காட்டு யானைகள் மேட்டுப்பகுதியில் இருந்த தாழ்வான நிலத்தடி பகுதியை கடந்து வரும் வழியில், மின்சார கம்பியில் உரசி மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து வனச்சரக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பார்க்கவே தேஜா, பொள்ளாச்சி வனச்சரகர் ஞான பாலமுருகன் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். உடற்கூராய்வு மேற்கொள்ள மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அப்பகுதியில் வனத்துறை மருத்துவக்குழுவினர் இரவில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இன்று (15ம் தேதி) மருத்துவக்குழுவினர் யானைகளுக்கு உடற்கூராய்வு மேற்கொள்வர் என கூறப்படுகிறது. மேலும் மின்சாரம் தாக்கி 2 பெண் யானைகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பொள்ளாச்சி அருகே 2 பெண் யானைகள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article