பேக்கரி தொழிலில் அசத்தி வரும் சாஃப்ட்வேர் என்ஜினியர் !

10 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

சுவையான உணவினை சாப்பிட வேண்டும், அதே சமயம் அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதே தற்போதைய நவீன உலகில் பலரும் விரும்பும் ஒரு விஷயமாக இருக்கிறது. அவை கொண்டாட்டங்களுக்காக செய்யப்படும் கேக்குகள், சாக்லேட் மற்றும் குக்கீஸ் வகையிலான பேக்கரி பொருட்களுக்கும் பொருந்தும். இதனை உணர்ந்து கொண்ட பலரும் முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு வீட்டிலேயே சின்னதாக இடம் ஒதுக்கி பல்வேறு செலிப்ரேஷன் கேக்குகள் மற்றும் குக்கீஸ்களை கஸ்டமைஸ் செய்து விற்பனைகளில் அசத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையில் பாடி பகுதியை சேர்ந்த ரக்தி, தனது பேக்கரி பொருட்களுக்கான வரவேற்பு மற்றும் விற்பனை, சந்தைப்படுத்துதல் போன்ற வியாபார நுணுக்கங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘நான் என்ஜினியரிங் படித்து விட்டு அப்போது சாஃப்ட்வேர் பணியில் இருந்தேன். எனக்கு சில்க் த்ரெட் ஜூவல்லரிகள் செய்ய பிடிக்கும். அதை கொஞ்ச காலம் தொழிலாகவும் செய்து வந்தேன். அதே போன்று எனக்கு முதலில் இருந்தே கேக் மற்றும் குக்கீஸ்கள் செய்வதில் அதீத ஆர்வமிருந்தது. ஒரு கட்டத்தில் சாஃப்ட்வேர் வேலையை விட்டு விட்டேன். கேக் தயாரிப்பு பயிற்சி வகுப்பிற்கு சென்று முறையாக கற்றுக் கொண்டு இத்தொழிலில் முழு நேரமாக இறங்கினால் என்ன என்கிற எண்ணங்கள் தோன்றியது.

அந்த பயிற்சிகள் மூலம் கேக் மற்றும் குக்கீஸ்கள் செய்வதில் இருக்கும் புதிய நுணுக்கமான ஐடியாக்களை கற்றுக் கொண்டேன். பின்னர் எனது குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பு கிடைக்க ‘லிட்டில் காட்டேஜ்’ என்ற பெயரில் கேக் விற்பனையை முழுநேரத் தொழிலாக மாற்றிக் கொண்டேன். தற்போது நான் வசிக்கும் பகுதியில் என்னுடைய கேக்குகள் மற்றும் குக்கீஸ்கள் மிகப் பிரபலம். என்னுடைய கடினமான உழைப்பினால் நிறைய வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறேன் என்பது எனது உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் எனலாம்.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலரும் ஹெல்த் கான்ஷியஸாக இருக்கிறார்கள். தரமான பொருட்களை பயன்படுத்தி அவர்கள் விரும்பும் ஃப்ளேவரில் வண்ணமயமான தீம்களில் விதவிதமான கேக்குகள் மற்றும் குக்கீஸ்களை செய்து தரச் சொல்லி கேட்கிறார்கள். கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் கேக்குகள் மற்றும் குக்கீஸ்கள் என்பது விற்பனையாளரின் சாய்ஸ் மட்டுமே.

ஆனால் எங்களிடம் வரும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தங்களுக்கென பிரத்யேகமான வகையில் தனித்தன்மையுடனான கேக் மற்றும் பிரவுனி வகைகளை செய்து தர கேட்கிறார்கள். ஒவ்வொரு நபர்களின் தேர்வுகளும், ரசனைகளுமே வெவ்வேறு விதமாக இருக்கும். அவர்களின் விருப்பங்களுக்கேற்ப விருப்பமான வகையில் செய்து தருவதால் கஸ்டமைஸ் செய்யப்படும் கேக்குகள் மற்றும் பொருட்களுக்கு தனி வரவேற்புகள் இருக்கிறது. இங்கு வாடிக்கையாளரே தேர்வாளர்கள்… அவர்கள் கேட்கும் வகையில் செய்து தருவதால் அவர்களுக்கு மனமகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது’’ என்றவர், அவரின் தயாரிப்புகள் குறித்து விவரித்தார்.

‘‘பொதுவாக கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான தீம் சொல்லி கேக் குக்கீஸ்கள் மற்றும் சாக்லேட் வகைகளை செய்து தரச் சொல்லி கேட்பார்கள். பிறந்தநாள், திருமண நாட்கள், கார்ப்பரேட் விழாக்கள் என தற்போது பலவற்றிலும் கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் இல்லாமல் இருப்பதில்லை. அது போன்ற விழாக்களுக்கு ஆர்டர் செய்கிறார்கள். பீட்ஸா, பன்கள், கப் கேக்ஸ், டீ கேக், பிரெட் என பல்வேறு பொருட்களை தனித்தன்மையுடன் தயாரித்து தருகிறேன். இந்த மாதிரியான விழாக்களில் கிஃப்ட் கேக், கப் கேக் போன்றவற்றை மொத்த ஆர்டர்களாக எடுத்தும் செய்து தருகிறேன். பல்க் ஆர்டர்களை செய்து கொடுப்பதன் மூலம் அடுத்தடுத்த தொழில் மற்றும் விற்பனை வாய்ப்புகளை பெறலாம். கேக் தயாரிப்பில் டெலிவரி என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்று. அழகான தரமான பேக்கிங் மற்றும் சேதாரமற்ற டெலிவரியும் நமக்கான சந்தை வாய்ப்பினை உருவாக்கி தரும்.

கேக் குக்கீஸ் என்றாலும் ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி செய்து தருகிறேன். நான் மைதாவிற்கு பதில் கோதுமை மற்றும் பல்வேறு சிறுதானிய மாவுகளைதான் பயன்படுத்தி செய்கிறேன். சிலருக்கு கோதுமை மாவு அலர்ஜியாக இருக்கும். அவர்களுக்கு ராகி, கருப்பு கவுனி அரிசி மாவு, ஓட்ஸ், சோளமாவினை பயன்படுத்துகிறேன். முட்டையில்லாத கேக்கும் செய்கிறேன். வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, கன்சாரி சர்க்கரையை உபயோகப்படுத்துகிறேன். சுத்தமான வெண்ணெய் மற்றும் ஒரிஜினல் கோக்கோ சாக்லேட் தான் பயன்படுத்துகிறேன். அதே போன்று செயற்கையான நிறங்களையும் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் காய்கறியில் இருந்து நிறங்களை எடுக்கிறேன்.

உதாரணமாக பீட்ரூட் பவுடர், கீரை பவுடர், கேரட் பவுடர் போன்றவற்றினை நிறங்களுக்காக பயன்படுத்துகிறேன். நான் தயாரித்து விற்பனை செய்யும் அனைத்து பேக்கரி பொருட்களிலுமே தரம் மற்றும் ஆரோக்கியத்தில்தான் முழு கவனம் செலுத்துகிறேன். அவ்வப்போது கிடைக்கும் ஃப்ரெஷ்ஷான பொருட்களை வாங்கி உடனுக்குடன் தயாரித்து அளிப்பதால் நிறைய வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் ஆர்டர் தருகிறார்கள்’’ என்றவர், சந்தைப்படுத்தும் முறை குறித்தும் விளக்கினார்.

‘‘எங்க அடுக்குமாடி குடியிருப்பில் எனக்காக வாடிக்கையாளர்கள் உள்ளனர். என் கேக் சுவையாகவும் தரமாகவும் இருப்பதால், அவர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு என் பொருளை ரெக்மென்ட் செய்தார்கள். வாய் மொழியாக ஒருவர் மற்றொருவரிடம் கூறிதான் எனக்கான வாடிக்கையாளர் வட்டம் அதிகரித்தது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் நான் என் தயாரிப்புகள் குறித்து பதிவு செய்வேன். அதன் மூலமாகவும் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். எனக்கு பெரும்பாலான ஆர்டர்கள் சமூக வலைத் தளம் மூலமாகத்தான் கிடைத்தது. சில குழுக்கள் வியாபார ஸ்டால்கள் நடத்துவார்கள். அதில் பங்கு பெறுவேன். அதன் மூலமாகவும் கஸ்டமர்கள் கிடைத்தார்கள். எனது தொழிலில் காட்சிப்படுத்துதல் என்பது மிக முக்கியமான ஒன்று. அதனை சமூக வலைத்தளங்களின் மூலமாக சுலபமாக செய்ய முடிகிறது. தற்போது ஒரு தனியார் ஆப் மூலமாகவும் எனக்கு நிறைய ஆர்டர்கள் வருகிறது.

‘‘தற்போது வீட்டில் வைத்துதான் செய்து தருகிறேன். எதிர்காலத்தில் சொந்தமாக பேக்கரி ஒன்றை வைக்க வேண்டும். பேக்கரி சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும். ஸ்டால்கள் மூலமாக பேக்கரி பொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். பேக்கரி மட்டுமில்லாமல் கஃபே ஒன்றையும் துவங்க வேண்டும். இப்படி நிறைய திட்டங்கள் உள்ளது. அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். என்னுடைய தொழிலில் தரம், சுவை மற்றும் கிரியேட்டிவிட்டிதான் ரொம்ப முக்கியம். அதனால் என்னுடைய ஒவ்வொரு கேக்கிலும் இந்த மூன்றும் இருக்க வேண்டும் என்பதை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறேன். உழைப்பு ஒன்றே என்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இது பெண்களுக்கு சிறப்பான பிசினஸ். முதலில் சிறிய அளவில் வீட்டிலேயே ஆரம்பிக்கலாம். அதற்கு சிறிதளவு முதலீடு போதும். பயன்படுத்த வேண்டிய மூலப்பொருட்கள் மற்றும் உருவாக்கக்கூடிய உணவு, தரம் மற்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். சுவையில் கூடுதல் கவனம் செலுத்தினால் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இந்தத் தொழிலுக்கு கிரியேட்டிவிட்டி ரொம்ப முக்கியம். உங்களின் கைத்திறன் மற்றும் கற்பனையை மூலதனமாக வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த முதலீட்டில் கணிசமான லாபத்தை பார்க்கக்கூடிய தொழில் இது. தொடர்ந்து உழைத்தால் கண்டிப்பாக வெற்றி உங்கள் வசம்’’ என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார் ரக்தி.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

 

The post பேக்கரி தொழிலில் அசத்தி வரும் சாஃப்ட்வேர் என்ஜினியர் ! appeared first on Dinakaran.

Read Entire Article