பெண்களுக்கு சமத்துவம், சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் - நடிகை ஐஸ்வர்யா ராய் பேச்சு

1 hour ago 1

துபாய்,

துபாய் பெண்கள் ஸ்தாபனம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகள் அளவிலான உலக பெண்கள் பேரவை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உலகில் சக்திவாய்ந்த பெண் தலைமைகளை ஊக்குவித்து தரமான வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை உலக அளவில் மேம்படுத்துவதற்கு இதன் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3-வது முறையாக நடப்பு ஆண்டில் நடந்த இந்த உலக பெண்கள் பேரவை கூட்டத்தில் 65 நாடுகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பிரபலங்கள், மந்திரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த கூட்டம் செல்வாக்கின் சக்தி என்ற கருப்பொருளில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக துருக்கி அதிபரின் மனைவி எமைன் எர்டோகன், பாகிஸ்தான் அதிபரின் மகள் ஆசிபா பூட்டோ ஜர்தாரி, உஸ்பெகிஸ்தான் அதிபரின் உதவி அதிகாரி சைதா மிர்சியேயோவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நேற்று மாலை பாகிஸ்தான் அதிபரின் மகள் ஆசிபா பூட்டோ சர்தாரி கலந்துகொண்டு பேசினார்.

அதேபோல் முதன்மை அரங்கில் முன்னாள் உலக அழகியும், இந்திய நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டு மாற்றத்தை உருவாக்கியவர் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இங்கு நாம் ஒன்று கூடியிருப்பது சாதாரண கூட்டத்தை விட சற்று மேலானது. இது அதிகாரத்தின் மரபு. இது ஒரு மரியாதை. இங்கு நான் இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். இந்த நிகழ்வு தொடக்கத்தில் இருந்து வெற்றி பெற்ற தளமாகும். அனைத்து வடிவங்களிலும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை இங்கு காணமுடிகிறது.

பெண்களாகிய நாம் என்ன சாதித்தோம் என்பதை மிளிரவைக்கும் நிகழ்வாக இது உள்ளது. பல்வேறு தரப்பிலும் பெண் ஆளுமைகள் இங்கு வந்து குரல் கொடுத்து ஒரு மாற்றத்திற்கான ஊக்கத்தை இங்கு பெற முடிகிறது. உலகம் முழுவதும் பெண்களுக்கு சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக மேடையில் உள்ள டிஜிட்டல் திரையில் ஐஸ்வர்யா ராயின் திரையுலக சாதனைகள் குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. அவரது நீல நிறத்திலான அழகிய உடை குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். உலக பெண்கள் பேரவை கூட்டத்தின் இறுதி நாள் நிகழ்ச்சி சிந்தகா பாரம்பரிய பகுதியில் நேற்று இரவு விருந்துடன் நிறைவடைந்தது.

Read Entire Article