
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பன்மொழி நடிகை சரோஜாதேவியின் மறைவு திரைத்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிறு வயதிலேயே திரைத்துறையில் நுழைந்து 70 ஆண்டுகள் சினிமாக்களில் நடித்துள்ளார். அவரை கன்னடர்கள் அபிநய சரஸ்வதி என்று அழைத்தனர். பிரபல நடிகர்களான எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., சிவாஜி கணேசன், ராஜ்குமார், திலீப்குமார், தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார் உள்ளிட்டோருடன் நடித்து புகழ்பெற்றார். அவர் ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரத்திற்கும் உயிர்கொடுத்தார். தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரியான முறையில் வாழ்ந்தார்.
நான் பலமுறை அவரை சந்தித்து பேசியுள்ளேன். அவர் அனைவருடனும் அன்பாக பழகினார். அவருக்கு பெரிய பண்பு இருந்தது. அவர் நடித்த கித்தூர் ராணி சென்னம்மா, பாக்யவந்தரு, மல்லம்மன பவாட, நியாயவே தேவரு உள்ளிட்ட படங்களை நான் பார்த்துள்ளேன். அவரது வீடு அமைந்துள்ள மல்லேசுவரம் 11-வது கிராஸ் சாலைக்கு சரோஜாதேவியின் பெயர் சூட்டுவது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.