புல்டோசர் கலாச்சாரம்

2 days ago 3

சிறுபான்மை மக்களை குறிவைத்து புல்டோசர் கலாச்சாரம் அதிகரித்து இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் புல்டோசர் கலாச்சாரத்திற்கு குட்டு வைத்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். புல்டோசர் கலாசாரத்தை முதலில் தொடங்கியது உத்தரப்பிரதேச அரசுதான். முதல்வர் யோகி, அங்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை வாடிக்கையாக செய்து வந்தார். இதனால் அவரை, `புல்டோசர் பாபா’ என்றே அவரது ஆதரவாளர்கள் அழைத்துவந்தனர்.

தொடர்ந்து, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்துக்கும் இந்தக் கலாசாரம் பரவியது. அப்போதைய ம.பி முதல்வரும், இப்போதைய ஒன்றிய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் `புல்டோசர் மாமா’ என்று அழைக்கப்பட்டார். பா.ஜவினரால் அதிகம் வரவேற்கப்பட்ட இந்த புல்டோசர் நடவடிக்கை, அதை தொடர்ந்து பா.ஜ ஆளும் அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கும் பரவின. இதையடுத்து புல்டோசர் கலாசாரத்துக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாத் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ‘ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரது வீட்டை எப்படி இடிக்க முடியும்… குற்றவாளியாக இருந்தால்கூட சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல், அவரது வீட்டை இடிக்க முடியாது. எந்தவொருக் கட்டடத்தை இடிக்கவும் சட்டங்கள் உள்ளன. ஆனால், அவை அடிக்கடி மீறப்படுகின்றன. கட்டுமானங்கள் இடிப்பது தொடர்பாக முழு நாட்டுக்குமான ஒரு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுப்போம்’ என்று எச்சரித்து இருந்தனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்றனர். இந்த விவகாரத்தில் உபி முதல்வர் யோகிக்கும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவிற்கும் மோதல் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’சுயநலத்துக்காக சிலர் புல்டோசரைப் பயன்படுத்துகின்றனர். 2027ல் சமாஜ்வாடி ஆட்சி அமைந்தவுடன் மாநிலத்தில் உள்ள அனைத்து புல்டோசர்களும் கோரக்பூரை நோக்கி திருப்பிவிடப்படும்’ என்று கூறியிருந்தார். கோரக்பூர் உபி முதல்வர் யோகியின் சொந்த ஊர்.

இதை தொடர்ந்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,’ புல்டோசரை இயக்க அனைவரும் தகுதியானவர்கள் அல்ல. மனதில் துணிவு கொண்டவர்களால் மட்டுமே அதனை இயக்க முடியும். கலவரக்காரர்களுக்கு முன்பு மண்டியிடுபவர்களால் புல்டோசர் முன் நிற்க முடியாது’ என்று தெரிவித்தார். புல்டோசர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே இப்படி அரசியல் வெளியில் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்போது சட்டவிரோதமாக புல்டோசர் பயன்படுத்துவதற்கு தடை விதித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். சட்டவிரோதமாக இடிப்பு ஒரு முறை நடந்தாலும், அது நமது அரசியலமைப்பின் நெறிமுறைகளுக்கு எதிரானது. பொதுச் சாலைகள், நடைபாதைகள் போன்றவற்றில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை அகற்றுவதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தெளிவுபடுத்தி உள்ளது உச்ச நீதிமன்றம்.

அப்போது உபி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘புல்டோசர் பயன்படுத்தி சொத்துகளை இடிப்பது தொடர்பாக கட்டுக்கதை உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார். அதற்கு,‘வெளியிலுள்ள சத்தம் எங்களை பாதிக்காது என்பதில் உறுதியாக இருங்கள்’ என்று குட்டு வைத்த உச்ச நீதிமன்றம், எங்களிடம் அனுமதி பெறாமல் எந்தவித கட்டுமானங்களையும் இடிக்க கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. புல்டோசர் கலாச்சாரம் உச்ச நீதிமன்ற உத்தரவால் மீண்டும் கட்டுக்குள் வரும் என்று நம்பலாம்.

The post புல்டோசர் கலாச்சாரம் appeared first on Dinakaran.

Read Entire Article