புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை பின்புற வாசல் வழியாக மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பல நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு விவசாயிகளை அழைத்து பேசுவதற்கு கூட தயாராக இல்லை. நம் நாட்டு விவசாயிகளிடம் பேசுவதற்கு கூட பாஜ ஆணவம் காட்டி வருகிறது. எல்லை பகுதிகளில் போராடும் விவசாயிகளுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு ஒன்றிய பாஜ அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கொள்கைகள் என்ற பெயரில் பின்வாசல் வழியாக மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்த தகவல் தனக்கு முன்னதாக தெரியவந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கொள்கைகள் குறித்து மாநில அரசுகளிடம் கருத்துக்களை அறிய, மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனையும் விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
The post புறவாசல் வழியாக வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர பாஜ முயற்சி: அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை appeared first on Dinakaran.