பும்ரா பந்து வீசும் முறையை கண்காணிக்க வேண்டும் - ஆஸ்திரேலிய வர்ணனையாளர் சர்ச்சை பதிவு

12 hours ago 1

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறி வருகின்றனர். 3 போட்டிகள் முடிவில் இதுவரை 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் இவரது பந்துவீச்சு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பும்ராவின் பந்து வீசும் முறையில் தவறு இருப்பதாக பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் மாரிஸ் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்து வீச்சை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை?. அவர் பந்தை எறிகிறார் என்று நான் சொல்லவில்லை. பந்து வீசும்போது அவருடைய கை கொஞ்சம் மாறி இருக்கிறது. இதை யாருமே கவனிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன்பு அதை சோதித்திருப்பார்கள்.

பும்ராவின் பந்துவீச்சு குறித்து நாம் கண்காணிக்க வேண்டும். இதை சொல்வதற்காக உடனே என்னுடைய தொண்டையை வந்து யாரும் கடிக்காதீர்கள். நான் அவர் பந்தை எறிவதாக குறை கூறவில்லை. ஆனால் அவருடைய பந்து வீசும் முறையை கண்காணிக்க வேண்டும். அவ்வளவுதான்!" என்று பதிவிட்டுள்ளார்.

Why has no one questioned the delivery of India paceman Bumrah? Is it not politically correct these days? I'm not saying he's throwing but at least the position of the arm at the point of delivery should be analyzed. Nine would have had it under the microscope some years ago

— Ian Maurice (@ian_maurice) December 22, 2024
Read Entire Article