பும்ரா அல்ல...ரோகித்துக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இவர் தகுதியானவர் - முகமது கைப்

2 weeks ago 4

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த கேப்டனை இப்போதே நியமிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பும்ரா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பும்ராவை காட்டிலும், ரோகித்துக்கு பின் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தகுதியானவர் ரிஷப் பண்ட்தான் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இப்போது இருக்கும் இந்திய அணியில், டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரிஷப் பண்ட்டுக்கு உள்ளது. அவர் அதற்கு தகுதியானவர். அவர் எப்போது விளையாடினாலும் இந்திய அணியை முன் வைத்து விளையாடுகிறார்.

எந்த வரிசையில் பேட்டிங் இறங்கினாலும் போட்டியை வென்று கொடுக்கும் ஆட்டத்தை ஆடுவதற்கு தயாராக இருக்கிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என எந்த நாடாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ரன் குவிக்கிறார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமோ அல்லது வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமோ எல்லாவற்றிலும் ரன் சேர்க்கிறார். ஒரு முழு பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். ரிஷப் பண்ட் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடும்போது ஒரு ஜாம்பவானாக ஓய்வு பெறுவார்.

அதற்குரிய ஆட்டத்தை அவர் ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது விக்கெட் கீப்பிங் வெகுவாக முன்னேறி இருக்கிறது. அவர் களத்தில் இருக்கும் வரை நியூசிலாந்து அணியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இப்போது இருக்கும் அணியில் எதிர்கால இந்திய அணி கேப்டன் யார் என்று பார்த்தால் அது நிச்சயம் ரிஷப் பண்ட் தான். ரோகித் சர்மாவுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாகும் தகுதி அவருக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article