புதுவையில் 'ஹாப்பி நியூஇயர்' பாடல்கள் பாடி புத்தாண்டை வரவேற்ற மக்கள்

2 days ago 2

புதுவை,

2024-ம் ஆண்டு விடைபெற்றது. 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வாண வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புதுவைக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். இதற்காக ஓட்டல், விடுதிகள் நிரம்பி வழிந்தன. சாதாரண விடுதிகளில் கூட அறைகள் இல்லை என்ற நிலை இருந்து வந்தது. புத்தாண்டு கொண்டாடி மகிழ நேற்று இரவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இறங்கினர். இதையொட்டி போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புதுவை கடற்கரையில் மாலை 6 மணி முதல் உள்ளூர் மக்கள் படையெடுத்து வரத்தொடங்கினர். கடற்கரை நுழைவு வாயில் பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு போலீசார் சோதனை செய்தனர். யாரும் மதுகுடித்து இருக்கிறார்களா? மதுபானங்கள் வைத்துள்ளார்களா? எனவும் சோதனையிட்ட பிறகே அனுமதித்தனர். பொதுமக்கள் கடலுக்குச் செல்வதை தடுக்க கடற்கரை சாலையில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையில் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகையால் 11 மணி கடற்கரை சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் கடற்கரையில் திரண்டு இருந்தவர்கள் 'ஹாப்பி நியூஇயர்' பாடல்கள் பாடி ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கியபடி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.  'ஹாப்பி நியூஇயர்' பாடல்கள் பாடி   2025-ம் ஆண்டு புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்த மற்ற இடங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இளைஞர்கள் முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் வலம் வந்து வாழ்த்து தெரிவித்தபடி சென்றனர். கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் புதுவை திக்குமுக்காடியது. கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணிக்குப் பின் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர்.

Read Entire Article