புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. இன்று கட்சியின் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ''அம்பேத்கர் முன்னின்று வடிவமைத்து உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தால்தான் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்பது மக்களின் எண்ணம். அம்பேத்கர் சனாதானத்துக்கு எதிராக, சமூக நீதிக்கு ஆதரவான அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளார். ஆனால் அவரை தாழ்வுபடுத்தும் வகையில் அமித் ஷா பேசியுள்ளார். அம்பேத்கரின் இட ஒதுக்கீடு சட்டத்தால்தான் பட்டியலின மக்கள் ஓரளவு கல்வியைப் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.