மதுரை,
மதுரை - அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியா சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தலைமை பண்பு, புதிய சிந்தனை, கண்டுபிடிப்புகளில் இந்தியா உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் அதிகம் தலைமைத்துவத்தில் இருந்தனர். தற்போது இளைய தலைமுறையினரும் அதற்கு வந்துள்ளனர். புதுவிதமான சிந்தனைகளுடன் வருவோர்தான் நாட்டை வழிநடத்த வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கையை மாற்றும் வகையில் புதிய கல்விக்கொள்கை 2020-ல் கொண்டு வரப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் வாழ்க்கையில் முன்னேறும் விதமாக இப்புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு நம்பிக்கை, புதிய உந்துதலை கொடுக்கும். இதன்மூலம் பொறியியல் படிப்பவர்களுக்கு, அவர்கள் படிக்கும் போதே தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
உங்களை நீங்கள் முன்னேற்றினால் நாடு தானாகவே முன்னேறும். எல்லாருக்குமான வளர்ச்சி வேண்டும் என்பது முக்கியம். பிரதமர் தலைமையில் அறிவிக்கப்படும் வளர்ச்சி திட்டங்கள் சமத்துவ பொருளாதாரம் அடைய வழி வகுக்கும். இளம் தொழில் முனைவோர்களின், வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.