புதிய அத்தியாயம்

6 days ago 8

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்த முத்தான திட்டங்கள் அனைத்தும், தற்போது மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டுக்குள் 1டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற மாபெரும் இலக்கோடு, முதல்வரின் சாதனை பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நிலத்திற்கு அமெரிக்காவின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்தார் முதல்வர். இதற்காக கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல், 15 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நாளே சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் முதலீட்டாளர்களை சந்தித்தார். முதல்வரின் அழைப்பை ஏற்று கடந்த 12ம் தேதி வரை, 18 நிறுவனங்கள் ரூ.7,616 கோடிக்கான ஒப்பந்தங்களை முதல்வர் முன்னிலையில் மேற்கொண்டன.

அமெரிக்காவில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தலைசிறந்த 23 நிறுவனங்களுடன் முதல்வரின் சந்திப்பு நடந்தது. இதில் 19நிறுவனங்கள் தொழில் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் 8நிறுவனங்கள், சிகாகோவில் 8நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,618கோடி முதலீடு தமிழகத்திற்கு குவிந்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 11,516பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் தொழில்கள் தொடங்கப்பட உள்ளது. மேலும் பலநிறுவனங்கள் நமது தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், நான் முதல்வன் திட்டம் வழியாக வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதற்குரிய செயற்கை தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்காக, கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட உள்ளது என்ற தகவலையும் முதல்வர் தெரிவித்துள்ளார். இது ஒரு புறமிருக்க நாடி வந்த அனைத்து நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடவில்லை. 100சதவீதம் தொழில் தொடங்க வாய்ப்புள்ள நிறுவனங்களோடு மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ‘சென்றோம்-வந்தோம்’ என்ற விதியை மாற்றிய முதல்வர் ‘சென்றோம்-வென்றோம்’ என்ற புதிய அத்தியாயத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளார்.

அயல்மண்ணின் தொழில் முதலீட்டாளர் சந்திப்பே பிரதான இலக்கு என்ற போதிலும் தமிழ் சங்கங்கள், தமிழ்அமைப்புகளின் நிர்வாகிகள், அமெரிக்கவாழ் தமிழர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்தார் முதல்வர். அவர்களின் ஈடற்ற வரவேற்பு, நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீண்டும் ஒரு முறை அயல்மண்ணில் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. 15நாட்கள் அமெரிக்க பயணம் முடித்து தாய்நிலத்தில் பாதம் பதித்த முதல்வரை அகம் மகிழ்ந்து வரவேற்றனர் நமது மக்கள். ‘‘அமெரிக்கா அரசு முறை பயணம் வெற்றி பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்திருக்கிறது. இது எனக்கான தனிப்பட்ட வெற்றி அல்ல. தமிழக மக்களுக்கான வெற்றிப்பயணம்,’’ என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளது மக்களின் மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.

The post புதிய அத்தியாயம் appeared first on Dinakaran.

Read Entire Article