“ஒரு தமிழன் பிரதமர் ஆக நாட்டை தயார்படுத்த வேண்டும்” - மநீம பொதுக்குழுவில் கமல்ஹாசன் பேச்சு

1 hour ago 4

சென்னை: “ஒரு தமிழன் பிரதமர் ஆக நாட்டை தயார்படுத்த வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை, தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (செப்.21) நடைபெற்றது. நிகழ்வில், கமல்ஹாசன் பேசியது: “அரசியலுக்குள் நுழையும்போது வேண்டாம் என்றார்கள். மக்கள் தோற்ற அரசியல்வாதியை கூட நினைவில் வைத்துக் கொள்வார்கள்; என்னைத்தான் சொல்கிறேன். தோல்வி என்பதும், பிரதமர் பதவி என்பதும் நிலையானவை அல்ல. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் எவ்வளவு ஆபத்தான பேச்சு. இந்தியாவுக்கு அது தேவையில்லை, தேவைப்படாது. கடந்த 2014-ல் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்தியிருந்தால் இன்றைக்கு இந்தியாவின் கதி என்ன? ஒட்டுமொத்தமாக அனைத்து தொகுதிகளையும் கீரைக் கட்டு போல் கையில் எடுத்திருப்பார்கள். அதன் பிறகு ஒரு திருநாமம் தானே இங்கு உரைக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டில் இதைச் செய்தால்தான் நமக்கு வழி விடுவார்கள் என்ற பயம் ஆட்சியாளருக்கு வேண்டும். எப்படி ஜனநாயகத்தை புரட்டிப் போடுவது என குழம்பிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தொகையை கட்டுப்படுத்த அறிவுறுத்தினர். அதை பின்பற்றியதற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கின்றனர். நாட்டை நடத்திக் கொண்டிருப்பது நாம் கொடுக்கும் பணம். சகோதர மாநிலங்களை பட்டினி போடச் சொல்லவில்லை. பகிர்ந்து உண்போம் என்கிறேன். சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய நம்மால் அவர்களுக்கு ஒரு தூதுவிட முடியவில்லையே. அந்தக் குரலாகத்தான் நாம் இருக்க வேண்டும். நான் இருப்பேன். ராஜகோபால் என்னும் தெலுங்கு பேசுபவர் இங்கு முதல்வராக இருந்தார். ஆனால், ஒரு தமிழன் பிரதமர் ஆக முடியுமா? அதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும். கோவையில் நடந்தது தோல்வி என்றால் அவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தது வெற்றியல்ல.

Read Entire Article