
பாட்னா,
பீகார் தலைநகர் பாட்னாவின் சுல்தான்கஞ்ச் பகுதியை சேர்ந்த ஜிதேந்திர மாத்தோ என்ற வக்கீல், அங்குள்ள டீக்கடை ஒன்றில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் மாத்தோ மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த அவர், அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
முன்னதாக சரண் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் ராய் என்ற ஆசிரியர் தனது நண்பருடன் பிசாகி பகுதியில் காரில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், நண்பர்கள் இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சந்தோஷ் ராய் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.