சென்னை: கடந்த சுதந்திர தினவிழாவில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஆகியவற்றுக்கு முதல்வர் உரிய அறிவுரைகளை வழங்கினார்.
மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும், மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு வரும் ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்களுக்கு வாய்ப்பு முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.