சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அவரது 109-வது படத்தில் நடிக்கிறார்.
'டாகு மகாராஜ்' என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கி உள்ளார். எஸ் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இதில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் இன்று வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணாவுடன் பணிபுரிந்த அனுபவத்தை இயக்குனர் பாபி கொல்லி பகிர்ந்துகொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
"'வால்டேர் வீரய்யா' படத்தில் பணிபுரிந்தபோது, நாக வம்சி என்னிடம் வந்து பாலகிருஷ்ணா சாருடன் ஒரு படம் பண்ணுமாறு கூறினார். அப்போதிலிருந்து நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் பாலகிருஷ்ணா சாரை பற்றிதான் பேசுவோம்.
தற்போது பாலகிருஷ்னா சாருடன் பணிபுரிந்தது ஒரு நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. அவர் ஒரு நட்சத்திரம் மட்டுமல்ல, தனது ரசிகர்களை ஆழமாக நேசிக்கக்கூடிய நல்ல மனிதர். இப்படத்தில் எங்கள் முயற்சியை பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன், "என்றார்