ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய பாலத்தில் 3 முறை சரக்கு ரெயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தூக்குப்பாலத்தை திறந்து மூடி பல்வேறு கட்ட சோதனைகளும் செய்யப்பட்டன. இந்த நிலையில் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்தார்.
நேற்று பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் 2 கி.மீ. நடந்து சென்றபடியே ஆய்வு செய்தார். புதிய ரெயில் பாலத்தில் கட்டப்பட்டுள்ள தூண்கள் உயரம், அகலம், கர்டரின் நீளம், எடை உள்ளிட்ட விவரங்களை ரெயில்வே கட்டுமான பொறியாளர்களிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து புதிய ரெயில் பாலத்தில் நடந்து சென்றபடி தூக்குப்பாலம் வரை சென்றார். அங்கு தூக்குப்பாலத்தை பார்வையிட்டு அதன் கட்டமைப்புகள் முழுமையாக குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் ராமேசுவரம் வரையிலும் 80 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படுகிறது. இதனை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்கிறார். தொடர்ந்து தூக்குப்பாலம் திறக்கப்பட்டும் ஆய்வு நடைபெற உள்ளது. பாதுகாப்பு ஆணையரின் ஆய்வறிக்கை ரெயில்வே துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான் பாம்பன் ரெயில் பாலத்தின் திறப்பு விழா தேதி உறுதி செய்யப்படும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.