பஸ் கட்டணத்தை தொடர்ந்து கர்நாடகத்தில் பால் விலையும் உயருகிறது

2 days ago 2

பெங்களூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 1½ ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த அரசு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்களால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற வளர்ச்சிப் பணிகளை செய்ய முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக அரசு, அனைத்து வகையான அரசு பஸ்களிலும் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பால் விலையும் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விலை உயர்வு தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். விரைவில் கர்நாடக பால் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் ஆலோசித்து பால் விலை உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுப்போம் என கர்நாடக கால்நடை துறை மந்திரி வெங்கடேசன் கூறினார்.

Read Entire Article